இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய (IMF) செயற்குழுவின் அனுமதி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும்.
அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் இலங்கைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது.
இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கைக்கு பெரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட அதன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது. சர்வதேச நாணய நிதியத்திற்கு செயற்குழுவைக் கூட்டி இலங்கையின் கடனுக்கான கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்தது.
முன்னெப்போதும் இல்லாத சவால்களில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தேவையான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
2022 செப்டெம்பர் 1 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை, நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஊடாக அனுசரணை வழங்கும் நான்கு வருட வேலைத் திட்டத்திற்காக அதிகாரிகள் மட்ட உடன்படிக்கையை மேற்கொண்டது.
0.33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்தத் திட்டத்தின் ஊடாக பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் இலங்கையின் நிதிக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் அதேவேளையில் முழுமையான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பரில் இருந்து, இலங்கை அரசாங்கம், நாட்டின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் பங்குதாரர்களை அறிவூட்டவும், வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் கூட்டங்களை நடத்தியது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, இந்த திட்டத்தின் கீழ் முதலாவது தவணையாக சுமார் 0.33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் எமது திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.
ஆரம்பத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் எங்கள் கடன் வழங்குபவர்களுடனும் நாங்கள் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.
தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும். இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.