இலங்கை மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியினால் தாமதமாகியுள்ள சுமார் 36 ஆயிரம் புதிய இணைப்புகளை எதிர்வரும் 06 வார காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிதிப்பிரச்சினை காரணமாக புதிய இணைப்புகளை வழங்குவதற்கான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளால், மின்சார சபையின் நிதித்துறை வலுப்படுவது புதிய மின் இணைப்புகளை வழங்க உதவும் என்றும் அவர் கூறினார்.
புதிய இணைப்புகளை பெற்றுக் கொள்வதற்காக பெருமளவானோர் பதிவு செய்துள்ள போதிலும் இணைப்புகளை வழங்குவதில் பாரிய காலதாமதம் ஏற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் எழுப்பப்பட்ட கேள்வியின் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
அத்துடன், இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செலவைக் குறைக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் இதன்போது கூறினார்.