மீண்டும் எரிபொருள் வரிசை | பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அசமந்தமே காரணமாம்

2 years ago
Sri Lanka
(432 views)
aivarree.com

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்கள் போதியளவு கிடைக்காததால், அனைத்துப் பகுதிகளிலும் எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

கடந்த மூன்று நாள் விடுமுறை காலத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிக்காமையே இந்த நிலைக்கு காரணம் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று நாட்களும் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருந்தமையால், எரிபொருள் கொள்முதல் செய்ய பணம் செலுத்தும் வசதி இருக்கவில்லை என சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி ‘அருணா’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சில நாட்களுக்கு எரிபொருளை நேரடியாக பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்ததாகவும், ஆனால் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் அதே தொகையை செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் விடுமுறை நாட்களில் எரிபொருளை காசோலை மூலம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அவர்கள் அதனை புறக்கணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை காரணமாக அனைத்து தொலைதூர மாகாணங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வார இறுதி நாட்களில் எரிபொருளை கொள்முதல் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை.

எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.