மியான்மாரின் தெற்கு ஷான் மாநிலத்தில் அமைந்துள்ள மடாலயத்தில் 30க்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் கிளர்ச்சிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
மியன்மாரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்தினர் ஆட்சி கவிழ்ப்பினை மேற்கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இன்று வரை இராணுவத்துக்கும் ஆயுதமேந்திய எதிர்ப்பு குழுக்களுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந் நிலையில் சனிக்கிழமை அன்று மடாலயம் அமைந்துள்ள கிராமத்தின் மீது எரிகணை தாக்குதல்களை அந்நாட்டு இராணுவத்தினர் நடத்தியதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலின் பின்னர் குறித்த கிராமத்திற்குள் இராணுவத்தின் விமானப் படை மற்றும் பீரங்கிகள் நுழைந்துள்ளதுடன், மடாலயத்தில் மறைந்திருந்த கிராம மக்களைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்களும் மூன்று பௌத்த பிக்குகளும் கொலை செய்யப்பட்டதாகக் கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
மியான்மர் பல தசாப்தங்களாக உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளது, இது 2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மேலும் அதிகரித்துள்ளது.
ஒன்றரை மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், 40,000 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, 8 மில்லியன் சிறுவர்கள் கல்வி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 மில்லியன் மக்கள் ஆபத்தான முறையில் உணவு பற்றாக்குறையாக எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.