பாகிஸ்தானின் இரண்டு மாகாணங்களில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

2 years ago
World
(563 views)
aivarree.com

பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாண சட்டசபைகளுக்கு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அந் நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் தலைமையிலான 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினர் இந்த தீர்ப்பினை புதன்கிழமை பிறப்பித்துள்ளனர்.

நாட்டின் 214 மில்லியன் மக்கள் தொகையில் (2017 மேற்கொண்ட கணக்கெடுப்பு) 110 மில்லியனைக் கொண்ட பஞ்சாப் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும்.

நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வாவில் 35 மில்லியன் மக்கள் உள்ளனர் மற்றும் இது மூன்றாவது பெரிய மாகாணமாகும்.

இவ் இரண்டு மாகாண சபைகளும் முன்பு இம்ரான் கானின் கட்சியால் கட்டுப்படுத்தப்பட்டன.

பஞ்சாப் மாகாண சட்டமன்றம் 2023. ஜனவரி 14 ஆம் திகதி கலைக்கப்பட்டது. கைபர் பக்துன்க்வா மாகாண சட்டமன்றம் 2023 ஜனவரி 18 ஆம் திகதி கலைக்கப்பட்டது.

பாகிஸ்தானின் அரசியலமைப்பின்படி, மாகாண சட்டசபை கலைக்கப்பட்ட பிறகு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலுக்கு நிதி வழங்க நிதி அமைச்சகம் மறுத்தமையினால் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் திகதிதயை நிர்ணயம் செய்ய தவறியது.

இதனையடுத்து கடந்த பெப்ரவரி 21 அன்று ஜனாதிபதி ஆரிஃப் அல்வி ஒருதலைப்பட்சமாக தேர்தலுக்கான திகதியை நிர்ணயித்தார். ஆளும் கட்சி அரசியல்வாதிகள் ஜனாதிபதியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அத்துடன் உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோர் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.

இரண்டு மாகாண தேர்தல்களுக்கும் 15 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (57 மில்லியன் அமெரிக்க டொலர்) தேவை என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கம் சீனா மற்றும் பிற உலகளாவிய கடன் வழங்குநர்களிடம் பெரும் கடனில் உள்ளதால் ஆழ்ந்த நிதி சிக்கலில் உள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) அவசர கடன் வழங்களினை கோரியுள்ளது. நிதி உறுதியற்ற தன்மையால் பணவீக்கமானது அரசியலில் பாரிய உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.