நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
ஒரு நிமிடம் 40 வினாடிகள் கொண்ட இந்த டீஸரில் ஏ.ஜி.ஆர். என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார்.
சிம்புவின் கம்பீர குரலின் மூலம் தான் எதற்கும் அச்சம் அற்றவன் என்ற பிரதிபலிப்பினை அவர் டீஸரில் வெளிப்படுத்துகின்றார்.
டீஸர் பல துப்பாக்கிச் சண்டைகள், வெடி விபத்துகள் மற்றும் புரட்சிக் காட்சிகளை கொண்டமைந்துள்ளதுடன், ஒரு மாஃபியா குழு தலைவரின் கதையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
டீசரின் முடிவில்தான் சிம்புவின் கேங்ஸ்டர் தோற்றம் முழுமையாக வெளியாகியுள்ளது. இப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சிவராஜ்குமாரின் கன்னடப் படமான முஃப்தியின் ரீமேக் ஆகும்.
சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.