பங்களாதேஷின் தெற்கு மாவட்டமான கொக்ஸ் பஜாரில் அமைந்துள்ள ரோஹிங்கிய அகதிகள் முகாமொன்றில் ஏற்பட்ட பாரியத் தீ விபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்குமிடங்களை இழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்தால் குறித்த முகாமில் சுமார் 2,000 தங்குமிடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்தினால் சுமார் 12,000 பேர் குடியிருப்புகளை இழந்து, நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் அதிர்ஷ்டவசமாக அனர்த்தத்தில் எந்த உயிரிழப்புகளும் இதுவரை பதிவாகவில்லை என்று கூறப்படுகின்றது.
மூன்று மணி நேரத்திற்குள் தீப்பரவலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் குறைந்தது 35 மசூதிகளும் அகதிகளுக்கான 21 கற்றல் நிலையங்களும் தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் நடந்து வருகின்றன.
குடியிருப்புகளை இழந்தவர்களுக்கு உணவு மற்றும் தற்காலிக தங்குமிடங்களை வழங்க அதிகாரிகள் சர்வதேச மற்றும் உள்ளூர் மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து, அண்மைய ஆண்டுகளில் முகாமை பாதித்த பல தீவிபத்துகளில் மிகப்பெரிய ஒன்றாகும்.