நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.
50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வேனில் பயணித்த 6 பேர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
வேனில் பயணித்த தாய் , தந்தை , இரு பிள்ளைகள் , உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் முச்சக்கரவண்டி சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவந்த மாணவர்களை ஏற்றிவந்த பஸ் மீண்டும் கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்த வேளையில் அதிக வேகம் காரணமாக நானுஓயா – ரதெல்ல பகுதியில் வைத்து வேன் மற்றும் முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது
இவ்விபத்தையடுத்து பிரதேச மக்களும் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பதற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.
காயமடைந்த மாணவர்களில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை உலங்குவிமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
விபத்தையடுத்து நானுஓயா குறுக்கு வீதி மூடப்பட்டுள்ளது. எனவே சுற்றுப்பாதையை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர் .
விபத்தையடுத்து நேற்று இரவு வைத்தியசாலைக்கு சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். அத்துடன் குறுக்கு வீதியை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்