சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், நீர், புகையிரதம், தபால் மற்றும் வங்கிகள் உட்படப் பல அத்தியாவசிய சேவை தொழிற்சங்கங்களால் நாடளாவிய ரீதியில் இன்று (15) வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் அண்மைய மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல அரசு வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் பல தொழிற்சங்கங்களின் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மீறி தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் இன்று வழமை போன்று இயங்குகின்றன.
இதனிடையே தொழிற்சங்க போராட்டத்திற்கு மத்தியிலும் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இன்று காலை 8 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தினார்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொலிஸ் பாதுகாப்புடன் ரயில்களை இயக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சாதாரண சேவைகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6.600 லிட்டர் கொள்வனவை கொண்ட 300 இற்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் பவுசர்களை விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.