தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் நியமனங்களை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்வதற்கு அரசியலமைப்பு பேரவை (CC) திட்டமிட்டுள்ளதாக உயர் மட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த தகவலுக்கிணங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு பேரவை, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைவாக ஆணைக்குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
விண்ணப்பங்கள் தற்போது வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ஆணைக்குழு உறுப்பினர்கள் இந்த மாதத்திற்குள் நியமிக்கப்படுவார்கள் என்றும் உயர் மட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு, தேசிய எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொது சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்பன புதிதாக அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது