2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பினை எதிர்வரும் மார்ச் மாதம் 28 முதல் 31 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் மாவட்ட தேர்தல் அதிகாரிகளினால் வெளியிடப்பட உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வாக்குச் சீட்டு அச்சிடுதல் மற்றும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு இன்று கடிதம் அனுப்பவுள்ளதாக அரசாங்க அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் மேல் நிதி செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் பதிலின் அடிப்படையில் வாக்குச் சீட்டினை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அரசாங்க அச்சகம் கூறியுள்ளது.