இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சைகளை ஆங்கில மொழியில் நடத்துவதைக் கட்டாயமாக்குவது தொடர்பில் சட்டக் கல்விப் பேரவை எடுத்த தீர்மானத்துடன் நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணங்கவில்லை.
அமைச்சர் கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (10) நடைபெற்ற நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
சட்டக் கல்லூரியின் பரீட்சைகளை ஆங்கில மொழியில் நடத்துவதைக் கட்டாயமாக்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான காரணம் மற்றும் அதன் பின்னணி என்ன என்பது குறித்து குழுவில் ஆஜராகியிருந்த உறுப்பினர்கள், சட்டக் கல்லூரியின் அதிபர் கலாநிதி அதுல பத்தினாயக்கவிடம் கேள்வியெழுப்பினர்.
சட்டத்துறையில் தற்பொழுது திறமையாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டக் கல்லூரியில் தமக்கு விருப்பமான மொழியில் தோற்றியவர்கள் என்பது இக்குழுவில் கலந்துகொண்ட பெரும்பான்மையான உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது. எனவே, சட்டத்தரணிகளாக விரும்புபவர்கள் தங்கள் தாய்மொழியில் பரீட்சை எழுதுவது சிறந்து விளங்குவதற்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என்பதும் குழுவின் கருத்தாகக் காணப்பட்டது.
அத்துடன், ஆரம்ப நீதிமன்றங்களில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகியன பிரதான மொழிகளாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதும் குழு உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் மாத்திரம் ஆங்கில மொழி பயன்படுத்தப்படுகிறது. மேலும், வடக்கில் தமிழ், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் நீதிமன்ற விசாரணைகள் தமிழிலும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் சிங்கள மொழியிலும் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறுவதாகவும் அங்கிருந்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
பெரும்பாலான கிராமப்புறங்களில் ஆங்கிலக் கல்வி குறைவாக இருப்பது உண்மை என்றும் ஆங்கிலத்தில் பரீட்சையை கட்டாயமாக்குவது அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையும் என்றும் உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர். எனவே, ஒரு மாணவர் தனது முதன்மை மொழியான தாய்மொழியில் பரீட்சையை எதிர்கொள்வதற்கான சுதந்திரம் காணப்பட வேண்டும் என்பதும் குழுவின் கருத்தாக அமைந்தது.
இந்த நிலையிலேயே, இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சைகளை ஆங்கில மொழியில் நடத்துவதைக் கட்டாயமாக்குவது தொடர்பில் சட்டக் கல்விப் பேரவை எடுத்த தீர்மானத்துடன் நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆமைச்சுசார் ஆலோசனைக் குழு இணங்கவில்லை.
இக்கூட்டத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, அமைச்சர் (கலாநிதி) பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், டிலான் பெரேரா, புத்திக பத்திரன, இஷாக் ரஹூமான், எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், கெவிந்து குமாரதுங்க, வீரசுமண வீரசிங்க, உத்திக பிரேமரத்ன, சாகர காரியவசம், உதய கம்மன்பில, மொஹமட் முஸம்மில், உதயன கிரிந்திகொட, லலித் எல்லாவல, காமினி வலேபொட, (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பத்தி, மதுர விதானகே, பிரேம்நாத் சி.தொலவத்தை, (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.