பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களை நேற்று தெளிவுபடுத்தியது.
அதனை அமுல்படுத்துவதற்கு கட்சி அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், ஆனால் கட்டமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சஜித் பிரேமதாசாவின் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் மற்றும் தொழில்முறை வட்டாரங்களுக்குள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை தாம் மதிக்கப்போவதில்லை என்று சஜித் தெரிவித்திருந்தார்.
எனினும் தெளிவுப்படுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின ;பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ச டி சில்வா மற்றும் எரான் விக்ரமநாயக்க ஆகியோர், ‘இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தேவை. அது முன்னோக்கிச் செல்ல வேண்டும்’ என கூறியுள்ளனர்.
மக்களின் ஆணை மற்றும் நம்பிக்கையை வெல்லக்கூடிய எதிர்கால அரசாங்கத்தால் அந்த உடன்படிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று ஹர்ச டி சில்வா கூறினார்.
‘நாங்கள் ஐ.எம்.எஃப் திட்டத்திலிருந்து விலகிச் செல்லவில்லை. சஜித் பிரேமதாச கூறியது என்னவென்றால், பலம் வாய்ந்த ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் வலுவாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த நெருக்கடியை உள்நாட்டு தீர்வின் மூலம் தீர்க்க முடியும் என்று யாராவது கூறினால் அது தவறு’ என்று டி சில்வா விளக்கினார்.