கொழும்பு குதிரை பந்தயத் திடலில் 24 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று (17) படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.
அவர் ஹோமாகம கிரிவத்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தினால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பலத்த இரத்தப்போக்கு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், கொலைச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் காதலன் என நம்பப்படும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் நேற்று மாலை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர் விசாரணைகளுக்காக கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இன்று, கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.