வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா குட்செட்வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் தம்மை மாய்த்து கொண்டதாக கூறப்படுகின்றது.
36 வயதுடைய அவரது மனைவியும், 9 மற்றும் 3 வயதுடைய இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களது உயிரிழப்பு எவ்வாறு இடம்பெற்றது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இன்றைய தினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை.
இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற நண்பர், வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது இரு பிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்ததுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.