2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவிருந்த விசேட கூட்டமொன்றை மார்ச் 07 ஆம் திகதி செவ்வாய்கிழமை கூட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த கூட்டத்தில் நிதியமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிப்பது ஒத்திவைக்கப்பட்டது.
எவ்வாறெனினும் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.