இந்த ஆண்டு நடைபெறும் என்று நம்பப்படும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (18) ஆரம்பமாகியுள்ளன.
இன்று தொடங்கி எதிர்வரும் 21ம் திகதி நண்பகல் 12 மணி வரைக்கும் மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.
வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்தப் பின்னர், தேர்தல் நடைபெறும் நாள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 4ம் திகதி கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரையில் 29 அரசியல் கட்சிகளும் 52 சுயாதீனக்குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தன.
இந்த தேர்தலில் 8000 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அதற்காக 30,000க்கும் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
2022ம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பு வாக்களிப்புக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் கல்முனை மாநகரசபைத் தேர்தலுக்காக கட்டுப்பணம் ஏற்கப்படுவதை இம்மாதம் 20ம் திகதி வரையில் இடைநிறுத்தி உச்ச நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டிருந்தது.
எம்.ஏ.மொஹமட் சலீம் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.