இலங்கை மீனவர்களை சாடி ஸ்டாலின், ஜெய்சங்கருக்கு கடிதம்

2 years ago
World
(454 views)
aivarree.com

இலங்கையர்கள் இந்திய மீனவர்களை தாக்கி அவர்களின் மீன்பிடி மற்றும் உபகரணங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் தோப்புத்துறை பகுதிக்கு கிழக்கே கடந்த 15-ஆம் திகதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​மூன்று விசைப்படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த 10 பேர் இந்திய மீன்பிடி படகை சுற்றி வளைத்து அப்பாவி மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.  

இத்தாக்குதலில் மீனவர் ஒருவருக்கு தலை மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டதுடன், மற்ற 5 மீனவர்களுக்கு உள் காயம் ஏற்பட்டது.

வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, சுமார் 200 கிலோ மீன் உள்ளிட்ட இந்திய ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கையர்கள் எடுத்துச் சென்றனர்.

காயமடைந்தவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், என்றும் ஸ்டாலின் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் இந்திய அரசு இலங்கையிடம் இந்த விவகாரத்தை எழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.